Close
அக்டோபர் 17, 2026 4:27 காலை

நாமக்கல் கோட்டை மாநகராட்சி பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் மாநகராட்சியில் வார்டு வாரியாக பள்ளி மாணவ மாணவிகளுக்குள டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் கோட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கலந்துகொண்டு பேசியதாவது: அனைவரும் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் கொசுப்புழு உள்ளதா என கண்டறிய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், தேங்கியுள்ள சுத்தமான நீரில் பெருகுகின்றன. எனவே, உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற தண்ணீர் தேக்கங்கள், பழைய டயர்கள், தேங்காய்ச் சிரட்டைகள், உடைந்த பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களை உடனடியாக அகற்றுங்கள். வீடுகளை சுற்றி தேங்கி உள்ள நீரை அகற்ற வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து டெங்கு குறித்த கேள்விகளுக்கு சிறப்பாக பதில் கூறிய மாணவர்கள் ஹரிஹரன், ஜிஷ்ணு ஸ்ரீஜித், இனியா ஆகியோருக்கு டெங்கு தடுப்பு தூதுவர் பட்டத்தை கமிஷனர் வழங்கினார்.

நிகழ்ச்சியில்  மாநகர் நல அலுவலர் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பாஸ்கரன், களப்பணி உதவியாளர் சபரிநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, உதவி தலைமை ஆசிரியர் முருகன், உடற்கல்வி ஆசிரியை ராதிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top