அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு மாற்றம் செய்த விவகாரத்தில் சுள்ளிபாளையம் விஏஓ சில தினங்களுக்கு முன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஏஓக்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பணியிட மாறுதல் உத்தரவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பரமத்தி வேலூர் அருகே சுள்ளிபாளையம் கிராமத்தில் இரண்டரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தனியாருக்கு மாற்றம் செய்து வழங்கப்பட்டது. எனினும் கோர்ட் உத்திரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்குள் நிலம் தனியாருக்கு மாற்றம் செய்தது தவறு என மாவட்ட நிர்வாகம் சுட்டிக்காட்டியது.
மேலும், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக சுள்ளிபாளையம் விஏஓ சுரேஷ் திருச்செங்கோடு கோட்டத்தில் இருந்து நாமக்கல் கோட்டத்தில் உள்ள செவ்விந்தப்பட்டி கிராமத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இப்பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி நாமக்கல், திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் கடந்த 12, 13-ம் தேதிகளில் விஏஓக்கள் மற்றும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட விஏஓக்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தால் விஏஓ அலுவலகம் மூடப்பட்டதால் பணிகள் முடங்கின. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இச்சூழலில் கடந்த 14-ம் தேதி டிஆர்ஓ மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட, விஏஓக்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இதனால் விஏஓக்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் விஏஓ பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் திருச்செங்கோடு கோட்டத்தில் பணி வழங்க டிஆர்ஓ மூலம் உத்திரவிடப்பட்டது. இதனால் விஏஓக்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




