பட்டாசு தொழில் நடைப்பெறும் இடங்களில் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விவரணங்களும், விவரங்களும், சரியான முறையில் நெறிப்படுத்தப்படுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தரப்படுகிற முக்கியத்துவம், சீனாவுக்கு அடுத்தபடியாக, பட்டாசு தயாரிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும், குட்டி ஜப்பான் சிவகாசிக்கு கொடுக்கப்படுவதில்லை
பட்டாசு தயாரிக்கும் தொழில் மிகவும் ஆபத்தானது. சிறுபொறி பட்டால் கூட முழு தொழிற்சாலையே அழிந்துவிடும். பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கும் அரசுகளும், நீதிமன்றங்களும் இந்த பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
மனித உழைப்பு மூலமே தயாரிக்கப்படும் இவற்றை தயார் செய்யும் தொழிலாளர்களுக்கு தரப்படும் பாதுகாப்பு என்பது உயர்த்தப்பட வேண்டும். பட்டாசு தொழிற்சாலை அதிபர்கள் இலாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு, பாதுகாப்பு என்பதை காற்றில் பறக்க விட்டு விடுகின்றனர்.
அதன் விளைவு மற்றும் விலை இவர்கள் உயிர்கள். இவர்களுக்கு ஆயுள் காப்பீடு என்பது உண்டா என்பது சந்தேகமே. உண்மையான நேர்மையான ஆய்வாளர்களால் அவ்வப்போது ஆய்வு செய்தல், பாதுகாப்பு பயிற்சிகள் வகுப்புகள் மற்றும் அடிக்கடி சோதித்தல் நடைபெற்றால் மட்டுமே இவர்கள் உயிர்களுக்கு உத்தரவாதம்.
பட்டாசுகளின் வெளிச்சம் நம் கண்களை ஈர்க்கும் அதே வேளையில், அந்த ஒளியை உருவாக்க இருளில் உழைக்கும் மக்களின் துயரங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது சமூகமாக நமது கடமையாகும்.
இங்கே ..,
உயர்ந்து நிற்பது உழைப்பு, உடைந்து நிற்பது ஊதியம்
வலிந்து நிற்பது ஆளுமை, வளைந்து நிற்பது அறியாமை
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋




