ஹைக்கூ கவிதைகளை பிரபலமாக்கியத்தில் புதுக்கோட்டைக்கும் பங்குண்டு. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் கவிஞர் மு.முருகேஷ், கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர்.
அவர்களைத் தொடர்ந்து புதுகையில் ஹைக்கூ கவிஞர்கள் உதயமாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு உதயம்தான், புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி மேனாள் ஆங்கிலத் துறைத் தலைவரும், தற்போது புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. கணேசன் அவர்கள்.
“யாதுமாகி நின்றாய் ஹைக்கூ ” நூலில் 100 கவிதைகள் உள்ளன. அதில் 10 கவிதைகள் கீழே உள்ளது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள் எல்லாவற்றிலும் ஹைக்கூ கவிதை பாடலாம் என்ற பொருளில் நூல் தலைப்பை வைத்திருக்கிறார் போலும் பேராசிரியர்.
- பிறப்பு, பிழைப்பு, இறப்பு
வாழ்க்கையே
ஹைக்கூ தானே!
பக். 2 - கவலை மேகங்கள்
கலைந்தன
குழந்தையின் சிரிப்பு மழை.
பக். 4. - இதுவரை அம்மா
80,000 தோசை சுட்டு உள்ளாள்
கின்னஸ் சாதனை…
பக். 8 - வலி எனக்கு,தைலம் உனக்கு
நியாயமா என்றது
யூகலிப்டஸ்!
பக்.11 - அமைதியை விரும்பும் துறவி
கண்டுபிடித்தார்
குங்ஃபூ!
பக். 19 - நடுத்தர இளைஞனுக்கு
நவீன வாழ்க்கையின் குறியீடு
இ. எம். ஐ யில் வாங்கிய கார்!
பக். 24 - வெள்ளையனை விரட்டி விட்டோம்
விரட்ட முடியாததாக
மொபைல் போன்.
பக். 32 - “யானைகள் ஜாக்கிரதை” என்றது அறிவிப்புப் பலகை
யானைக் கூட்டத்தின் தலைவி சொன்னது
“மனிதர்கள் உஷார்”…
பக். 33. - உன் ரெக்கையை நான் வெட்டினேன்
நீயோ என் எதிர்காலத்தைக் கணித்தாய்
கூண்டுக் கிளி…
பக். 37. - மரங்களில்
நீ கர்ணன் மரபு
வாழை …
பக். 39.
மழை, கிரிக்கெட், குழந்தையின் சிரிப்பு, பாம்பு, தீப்பெட்டிகள், காகம், பருந்து, யூகலிப்டஸ் மரம், முத்துலெட்சுமி ரெட்டி பாரதி, ஐன்ஸ்டீன், கலாம், மேரி கோம், பனை மரம், வாழை என்று எல்லாவற்றைப் பற்றியும் கவிதை பாடியுள்ளார்.
“ஹைக்கூ என்பது வானத்தைக் கீரி வையத்தை கோடி சூரியபிரகாசத்தில் ஆழ்த்தும் மின்னல். கார்முகில்கள் குவிந்தால் தான் மின்னல் வரும். அப்படி வருவது தான் ஹைக்கூ ” என்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். ( அமுதபாரதி ஆயிரம் ஐக்கூ நூல் அணிந்துரையில்)
“கவனிப்பின் மையத்தில் திரண்டு மேலெழுகிற
‘கரு’ வை சொற்களால் வெளிப்படுத்துகையில் அது கவிதையாகிறது. கவிதை என்பது முப்பது வரிகளாகவும் நீளலாம்; மூன்று வரிகளிலும் முடியலாம்.
“என்ன முப்பது வரிகளுக்கான செய்திகளை மூன்று வரிகளுக்குள் கொண்டு வருகையில் அது ஐக்கூ கவிதையாகிவிடுகிறது. 1970 களில் வெள்ளுடை ஞானி வேதாத்ரி மகரிஜி அவர்களிடம் யான் தியானம் பயன்றபோது கிடைத்த ‘மன ஓர்மை’, ஐக்கூ க கவிதைகளுடன் ஐக்கியம் கொள்கிற போதும் எனக்கு வாய்க்கிறது …
“ஆமாம், உள்முக நோக்காய் நம்மைக் கொண்டு செலுத்துகிற உன்னதம் ஐக்கூ கவிதைகளில் உண்டு” என்கிறார் ஹைக்கூ கவிதைகளின் முன்னத்தி ஏர் அமுத பாரதி. (அமுதபாரதி ஆயிரம் நூல் முன்னுரையில்)
“நதியில் நீராடும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு நீரில் நீராடுவதைப் போல ஹைக்கூவை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒருபுது அர்த்தம் கிடைக்க வேண்டும். சொற்களை இறுகக் கட்டிவிடவும் கூடாது. முழுவதும் அவிழ்த்து விடவும் கூடாது. ஹைக்கூ கிச்சு கிச்சுத் தாம்பாளம் விளையாட்டைப்போல. சிறு மணற்கரை அமைந்து , ஒரு குச்சியை உள்ளே வைத்து ஒருவர் கையை வைத்து மூடிக்கொள்ள மற்றவர் கண்டுபிடிக்க முயற்சிப்பார். ஒருவர் மறைத்து வைக்க அதை மற்றவர் கண்டுபிடிக்கும் விளையாட்டே கிச்சு கிச்சுத் தாம்பாளம். ஹைக்கூவும் அப்படித்தான் ” என்று ஹைக்கூவிற்கு இலக்கணம் தருகிறார் ஹைக்கூவில் தடம்பதித்திருக்கும் புதுக்கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் மு.முருகேஷ் உடனான உரையாடலில். ( தூண்டில் – தமிழ் ஹைக்கூ – 5 ஆவது உலக மாநாட்டு மலர்)
நல்ல கவிதை நூல் கிடைக்குமிடம்:
கீதா புக்ஸ், புதுக்கோட்டை
94438 55563
ரூ. 125




