திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கண்காணிக்க, பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன், தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமானதுர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் மாதம் 24ம் தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள அம்மணி அம்மான் மண்டபத்தில் உள்ள இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்ததாக டி.எஸ். சங்கர் என்பவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்த ஜீவானந்தம் என்பவர் காலசாந்தி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை தனக்கு உள்வாடகைக்கு விட்டதாகவும், எனவே அவரை அறங்காவலர் குழுத் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, சங்கரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். அதேபோல அறங்காவலர் குழுத் தலைவர் பதவியில் இருந்து ஜீவானந்தத்தை தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுகளை எதிர்த்து அறநிலையத்துறை மற்றும் ஜீவானந்தம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அம்மணி அம்மாள் மண்டபத்தில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். மடத்துக்குள் அமைந்துள்ள அம்மணி அம்மான் கோயிலை புதுப்பிக்க வேண்டும்.
அந்தப்பகுதியில் காலியாக உள்ள 25 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பக்தர்களுக்கான தங்குமிட வளாகம் கட்ட வேண்டும். இந்த கட்டுமானத்தை வரும் 2027 மார்ச் இறுதிக்குள் தொடங்க வேண்டும். புதிதாக கட்டப்படும் அந்த வளாகத்துக்கு அம்மணி அம்மான் பெயரை சூட்ட வேண்டும். நிரந்தர கட்டிடம் கட்டும் வரை, அந்த இடத்தில் தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக காத்திருப்புக்கூடம், உணவுக்கூடம், பொருட்கள் வைக்கும் அறைகள், கழிவறைகள் போன்றவற்றை தற்காலிகமாக ஏற்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வரும் நவ.10-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோயில் செயல் அலுவலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை கோயில் நிர்வாகம் முறையாக அமல்படுத்தி தீபத்திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கிறதா என்பதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் அறநிலையத்துறை ஓய்வுபெற்ற இணை ஆணையர் எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழுவையும் அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உயர்மட்டக்குழு நவம்பர் 10-ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவி்ட்டு, இந்தக்குழுவுக்கு கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.




