Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

குளிர்காலத்திற்காக மூடப்பட்டது கேதர்நாத் கோவில்!

புகழ்பெற்ற புனிதத் தலமான கேதர்நாத் கோவிலின் நடைகள், குளிர்காலத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டன.

இந்த ஆண்டு தீர்த்த யாத்திரை காலத்தில் 19.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கேதர்நாத் நாதனைத் தரிசித்து சென்றுள்ளதாக பத்ரிநாத் கேதர்நாத் கோவில் குழு தலைவர் ஹேமந்த் திரிவேதி தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய சடங்குகள், வேத பாராயணங்கள் மற்றும் ராணுவ வாத்தியக் குழுவின் இசை முழக்கத்துடன் நடைசாத்தும் விழா விமரிசையாக நடைபெற்றது. குளிர்கால ஓய்வுக்கு முன்னதாக கேதர்நாத் பெருமானைக் கடைசிமுறையாகத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.

நிகழ்வு குறித்து பேசிய கோவில் குழு தலைவர் ஹேமந்த் திரிவேதி, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புனித சடங்கில், ஆறு மாதங்கள் நரராலும், ஆறு மாதங்கள் நாராயணராலும் வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் முதல் கட்ட வழிபாட்டு சடங்குகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. நாடு முழுவதிலும் இருந்தும் உலக அளவிலிருந்தும் சுமார் 19.5 லட்சம் பக்தர்கள் வருகை தந்து பாபா கேதாரின் அருளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், இந்த யாத்திரை தடையின்றி நடைபெற ஒத்துழைத்த கேதர் சபா, தீர்த்த புரோகிதர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கேதர்நாத் நடை மூடப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பாபா கேதாரின் உற்சவ பல்லக்கு அவரது குளிர்கால உறைவிடமான உகிமத்தில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோவிலுக்குப் புறப்பட்டது. குளிர்காலம் முழுவதும் பாபா கேதாருக்கு அங்கேயே தினசரி வழிபாடுகள் நடைபெறும் என்றும், கேதர்நாத் வர முடியாத பக்தர்கள் உகிமத் சென்று தரிசனம் பெறலாம் என்றும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ருத்ரபிரயாக் கலெக்டர் விஷால் மிஸ்ரா கூறுகையில், “கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி திறக்கப்பட்ட கேதர்நாத் நடைகள் முறைப்படி மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 19.20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்” என்று உறுதிப்படுத்தினார்.

கேதர்நாத் யாத்திரை நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு கோவில் நடைகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top