ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 கபடி தொடரில், இந்திய மகளிர் அணி ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 37-34 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதலாவது பாதியின் முடிவில் இந்திய அணி 22-16 என 6 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது.
ஆனால், இரண்டாம் பாதியில் ஈரான் அணி பலமான பதிலடி கொடுத்தது. ஈரானிய வீராங்கனைகள் அதிரடியாக புள்ளிகளைச் சேகரித்து 18-15 என இரண்டாம் பாதியில் முன்னிலை பெற்றபோதிலும், ஆரம்பத்தில் இந்தியா எடுத்த புள்ளிகளின் முன்னிலை கை கொடுத்தது. இறுதியில் 37-34 என்ற கணக்கில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
வெற்றியைத் தீர்மானித்த தருணங்கள்
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை பூஜா, இக்கட்டான தருணங்களில் அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாகத் திகழ்ந்தார். ஈரானின் முன்னணி ரைடர்களை தடுத்து நிறுத்தி, இந்திய அணிக்குத் தேவையான முக்கியப் புள்ளிகளை டிஃபெண்டர் பாவனா தேவி பெற்றுத் தந்தார்.
2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஈரானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியிருந்த இந்திய மகளிர் அணி, இம்முறை அதற்குப் பதிலடி கொடுத்து மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. போட்டி முடிந்ததும், இந்திய வீராங்கனைகள் தேசியக் கொடியை ஏந்தி ‘வந்தே மாதரம்’ கோஷங்களுடன் மைதானத்தைச் சுற்றி வந்து தங்களின் வெற்றியைக் கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து, ஆடவர் கபடி பிரிவிலும் இந்திய அணி ஈரான் அணியை எதிர்கொண்டு தங்க இரட்டைச் சாதனையை எட்டக் காத்திருக்கிறது.




