நாமக்கல் மாவட்டத்தில் 95 அரசு நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
அரசு புறநகர் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயணத்தை, வெற்றிப் பயணம் என்ற பெயரில் சென்னையில் தமிழக முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு வெற்றிப்பயணம் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மதுபாலன் திட்டத்தை துவக்கி வைத்து பேருந்தில் சென்ற மகளிருக்கு இலவச பேருந்து டிக்கட்டுகளை வழங்கினார்.
தமிழகத்தில், தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதிப் பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெற்றிப் பயணம் திட்டத்தில், முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ளும் வகையில், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 10 எல்எஸ்எஸ் தாழ்தள நகரப் பேருந்துகள், 10 மலை வழித்தட பேருந்துகள்,75 சாதாரணக் கட்டண புறநகர் பேருந்துகள் என 95 பேருந்துகளில் வெற்றிப்பயணம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.




