Close
அக்டோபர் 6, 2026 8:09 மணி

கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் வங்கிகளில் கிராமிற்கு ரூ. 10 ஆயிரம் வரை நகைக்கடன்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் வங்கிகளில் நகைக்கடன் ஒரு கிராமிற்கு ரூ. 10 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இது குறித்து, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

கடந்த ஆண்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு கடந்த அதிகபட்ச வட்டி விகிதம் 12-ல் இருந்து 13 சதவீதமாக ஆக உயர்த்தப்பட்டிருந்தது.

மேலும், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ. 7,000 எனவும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு 75 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது நகைக் கடன்களுக்கு, ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ. 10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவி வந்தது. இதனைச் சீரமைக்கும் வகையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம், கூட்டுறவு சங்க கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கூட்டுறவு சங்கங்களின் லாப வரம்பு 2.25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவு, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top