திமுக செயலாளரிடம் ரூ. 2.50 கோடி மோசடி செய்த வழக்கில், ராசிபுரம் நகராட்சி சுயேச்சை பெண் கவுன்சிலரின் கணவரை 3 ஆண்டுகளுக்குப் பின் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மோகனூரைச் சேர்ந்தவர் செல்லவேல். இவர் மோகனூர் பேரூராட்சி திமுக செயலாளராக உள்ளார். தவிர மோகனூர் பேரூராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ராசிபுரம் நகராட்சி 12-வது வார்டு சுயேச்சை பெண் கவுன்சிலர் சசிரேகா மீது நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் மோசடி புகார் அளித்தார்.
அந்த புகாரில் கடந்த 2020-ம் ஆண்டு சசிரேகா, அவரது கணவர் சதீஸ், மாமனார் வெங்கடாஜலபதி ஆகியோர் அறிமுகமாகினர். அப்போது சசிரேகாவின் கணவர் சதீஷ், தான் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து சுற்றுலாவுக்கு பயன்படுத்தி வரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதில் முதலீடு செய்பவர்களுக்கு, பாதி விலையில் புதிய கார் வாங்கி தருவதாக தெரிவித்தார்.
இதை நம்பி கடந்த 2020-ம் ஆண்டு சதீஷ் அவரது மனைவி சசிரோகவிடம் எனது வங்கிக் கணக்கு மூலம் பல கட்டமாக ரூ. 2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் வழங்கினேன். ஆனால் அவர்கள் கூறியபடி கார் எதுவும் வாங்கித் தரவில்லை, என குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பெண் கவுன்சிலர் சசிரேகா, அவரது கணவர் சதீஷ், மாமனார் வெங்கடாஜலபதி ஆகிய 3 பேர் மீதும் கடந்த 2023-ம் ஆண்டு நம்பர் மாதம் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




