Close
அக்டோபர் 8, 2026 6:45 காலை

எஸ்ஐஆரை எதிர்க்கும் காங்கிரசார் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக மாநில துணைத்தலைவர்

தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆரை எதிர்க்கும் காங்கிரசார், தாங்கள் வெற்றிபெற்ற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூறினார்.

பாரத பிரதமர் மோடி, மக்கள் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு, நாமக்கல்லில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், சேவா ஜோதி ஜோதி யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜ மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி பேசிய பேச்சை நேரடி ஒளிபரப்பில் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல், பார்க் ரோட்டி நடைபெற்ற சேவா ஜோதி யாத்திரையை மாநில பாஜக தலைவர் ராமலிங்கம், தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகளும், பாரத பிரதமராக தொடர்ந்து 12 ஆண்டுகளும் மக்கள் சேவை ஆற்றி வரும் பிரதமர், 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கு, பாரத நாட்டின் அனைத்து இளைஞர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், மாபெரும் ஊக்கமளிக்கும் வகையில் தனது சேவா ஜோதி யாத்திரை, வளர்ச்சி அடைந்த பாரதம் உறுதிமொழி உரை அமைந்திருந்தது.

இந்திய ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கு, ராகுல் காந்தி போன்ற எத்தனை பேர் வந்தாலும், ஜனநாயக கடமை ஆற்றுவதில் இருந்து பாஜ சிறிதும் பின்வாங்காது என்பதைத்தான் பிரதமரின் பேச்சு தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

வளர்ச்சி அடைந்து வரும் பாரதத்தின் வளர்ச்சியை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத ராகுல் காந்தி, சுதந்திரம் வாங்கித்தந்த கட்சிகளில் ஒன்று காங்கிரஸ் என்பதை மறந்து விட்டு, அந்நிய சக்தியின் தூண்டுதலால், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) எதிர்த்து வருகிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடைபெற்ற பிறகு தான் தமிழகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று, தற்போது ஒருவர் அமைச்சராக உள்ளனர். இப்போது எஸ்ஐஆரை எதிர்க்கும் அவர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு போராட வர வேண்டும்.

தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல் தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. முதல்வர் விஜய், தமது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக, வேறு கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை இழுத்து வந்து, இப்போது இடைத்தேர்தலில் அவரது கட்சிக்காக போட்டியிட வைக்கிறார்.

எனவே இந்த இடைத்தேர்தலுக்கான முழு செலவையும் விஜய் தனது சொந்த அல்லது கட்சி செலவில் ஏற்றுக் கொண்டு செலுத்தினால் அவர் யோக்கியனாக கருதப்படுவார் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top