சோழவந்தான் தொகுதி கனிம வளங்கள் நிறைந்த தொகுதியாக உள்ளது. குறிப்பாக, சோழவந்தான் பகுதியில் வைகை ஆறு பாலமேடு பகுதியில் சாத்தையார் அணை அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி பகுதிகளில் கணிம வளங்கள் நிறைந்து காணப்படுகிறது .
இந்த பகுதிகளில், அரசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிம வள கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளது.
இருப்பினும், மணல் மாபியாக்களின் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயமும் மற்றும் மணல் கொள்ளையால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சோழவந்தான் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 20,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சோழவந்தான் வடகரை கண்மாயில் கடந்த சில தினங்களாக நடைபெறும் கனிம வள கொள்ளை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கன்மாயில், கடந்த சில தினங்களாக மூன்று ஜெசிபி எந்திரங்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் உள்ள கரம்பை மணலை கொள்ளையடித்து செல்வதாக கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கரம்பை மணல் அள்ள படுவதாகவும் ,
டிராக்டர்கள் சாலைகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் பள்ளி வாகனங்களுக்கு எதிரே செல்வதாகவும் புகார்கள் வந்த நிலையில் இதுகுறித்து வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது அனுமதி சீட்டு பெற்று கரம்பை மணல் அள்ளுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் கூறிய நிலையில், ஒரே நேரத்தில் மூன்று ஜேசிபி எந்திரத்தை கொண்டு 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் கனிம வளங்களை அள்ளக்கூடிய அவசியம் என்ன வந்தது என விவசாயிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
இது போன்ற கனிமவள கொள்ளை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் சோழவந்தான் வடகரை கண்மாயில் மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு செய்து கனிமவள கொள்ளை நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கையும் கனிம வள கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற கனிமவள கொள்ளை நடப்பதாக கூறப்படும் நிலையில் தொகுதி முழுவதும் மாவட்ட ஆட்சியர் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




