Close
அக்டோபர் 20, 2026 5:41 மணி

நாமக்கல் நகரில் ஆயுதபூஜையையொட்டி 107 டன் குப்பைகள் அகற்றம்

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜையின் போது பயன்படுத்தப்பட்ட வாழை மரங்கள், மாவிலை, உடைக்கப்பட்ட பூசணிக்காய் என நகரம் முழுவதும் ஆங்காங்கே குப்பை குவியலாக காட்சியளித்தது.

இதையடுத்து மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மாநகரில் உள்ள 51 வார்டுகளில் குப்பைகளை சேகரித்து வாகனங்களில் ஏற்றி சென்றனர். மாநகராட்சிக்கு சொந்தமான 6 டிப்பர் லாரிகள், 30 சரக்கு ஆட்டோக்கள் மூலம் 503 தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி நேரடியாகச் சென்று தூய்மைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முக்கிய ரோடுகளில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

சுகாதார அலுவலர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணி, செல்வகுமார், மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாநகரில் வழக்கமாக தினசரி 61 டன் கழிவுகள் அகற்றப்படும். நேற்று ஆயுத பூஜை கழிவுகள் மற்றும் குப்பைகள் என்ன மொத்தம் 107 டன் கழிவுகள் அகற்றப்பட்டது. இந்த குப்பைகள் நாமக்கல் கொசவம்பட்டியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது.

அதில் மக்கும் குப்பை மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு அரியலூர் சிமெண்ட் ஃபேக்டரிக்கு அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top