Close
அக்டோபர் 20, 2026 6:06 மணி

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலை அரிசி, மளிகைப் பொருட்கள் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் சன்ன ரக புழுங்கல் அரிசி கிலோ ரூ. 30-க்கும், குறைக்கப்பட்ட விலையில் 6 வகை மளிகைப் பொருட்களும் 5 கூட்டுறவு அங்காடிகள் மூலம் பெறலாம். இது குறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வெளிச்சந்தையில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தமிழக அரசின் மூலம் சன்னரக அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசி, சில குடும்பங்களுக்கு போதுமானதாக இல்லாததால், வெளிச்சந்தைகளில் அரிசி விலை உயர்வினைத் தவிர்த்து, பொதுமக்கள் குறைந்த விலையில் சன்ன அரிசி பெறும் வகையில் கிலோ ரூ. 30 விலையில் கூட்டுறவு அங்காடிகளில் சன்ன ரக அரிசி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

ரேசன்கார்டுதாரர்கள் தலா 5 கிலோ வரை, அரிசியின் தரம் பார்த்து இந்த அரிசியை வாங்கிக்கொள்ளலாம். மேலும், கூட்டுறவு அங்காடிகளில் புழுங்கல் பொன்னி அரிசி கிலோ ரூ. 60, துவரம்பருப்பு கிலோ ரூ. 130, உளுத்தம்பருப்பு கிலோ ரூ. 140, பூண்டு கிலோ ரூ. 240, கொத்தமல்லி கிலோ ரூ. 240, வர மிளகாய் கிலோ ரூ. 330 என்ற விலையில் பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கும் கூட்டுறவு விற்பனை மையங்கள்: மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, மோகனூர் ரோடு, நாமக்கல். டிசிஎம்எஸ் சொசைட்டி, திருச்செங்கோடு, பள்ளிபாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்க கிடங்கு, வெப்படை. ஆர்சிஎம்எஸ் சொசைட்டி, ராசிபுரம், மோகனூர் சர்க்கரை ஆலை பணியாளர்கள் பண்டகசாலை, மோகனூர் ஆகிய இடங்களில் வெளிச்சந்தையைவிட குறைவான விலையில் அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை பொதுமக்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top