Close
நவம்பர் 26, 2026 5:36 மணி

குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் வீடுகளுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

குப்பைகளை 4 வகையாகப் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு, நாமக்கல் மாநகராட்சி சார்பில் சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் வகையில், வீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

தூய்மையான நாமக்கல் மாநகராட்சியை உருவாக்கும் வகையில், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை மக்கும், மக்காத, சுகாதார, சிறப்பு கழிவுகள் என 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும்.

இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 31வது வார்டு கணேசபுரம் பகுதியில், வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்புப் பராமரிப்புக் கழிவுகள் என 4 வகையாகக் குப்பைகளைப் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் முறையாக வழங்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் சிறப்பு அங்கீகார ஸ்டிக்கர்கள் அவர்களது வீடுகளின் கதவுகளில் ஒட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 31-ஆவது வார்டில் உள்ள மொத்தம் 1,598 வீடுகளில், 1,358 வீடுகள் குப்பைகளை 4 வகையாகப் பிரித்து வழங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்த வீடுகளில் 84.98 சதவீதமாகும். மேலும், குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்காத 240 வீடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இனிவரும் காலங்களில் நான்கு வகையாகக் குப்பைகளைப் பிரித்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, உதவிப் பொறியாளர் ரவி, துப்புரவு ஆய்வாளர்கள் சுப்பிரமணியம், செல்வகுமார், கவுன்சிலர் ஜெயமணி, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top