Close
நவம்பர் 28, 2026 4:27 மணி

சாதனை படைக்கும் தேனி உழவர்சந்தை. ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் வியப்பு…!

தேனி உழவர் சந்தையில் ஆய்வு நடத்திய அதிகாரிகள்

செய்தியாளர் – மா.பாண்டியராஜ்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட தேனி உழவர்சந்தை தமிழகத்தில் மிகச்சிறந்த காய்கறி சந்தைகளின் பட்டியலில் முதல் வரிசையில் உள்ளது.

தேனி உழவர்சந்தை நகரின் மையப்பகுதியில் தாலுகா அலுவலகத்தின் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1999ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. 27வது ஆண்டாக செயல்பட்டாலும், சந்தை மிகவும் சிறப்பாகவே இயங்கி வருகிறது.

சந்தை தொடங்கப்பட்ட போது தேனி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் பஷீர் அகமது. முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் சந்தை இயங்கியதால், மாவட்ட ஆட்சியர் பஷீர் அகமது மிக, மிக சிறப்பாக நிர்வாகம் செய்தார்.

காலை 4 மணிக்கு சந்தை தொடங்கி விடும். முதல்நாள் இரவே சந்தைக்கு காய்கறிகள் வந்து விடும். சுமார் 76 விவசாயிகள் தினமும் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். காலை 11 மணி வரை சந்தை இயங்கும். சராசரியாக தினமும் 60 முதல் 70 வகையான காய்கறிகள் பிரெஸ்ஸாக கிடைக்கும். தினமும் சராசரியாக 6 ஆயிரம் பொதுமக்கள் சந்தைக்கு வருகின்றனர். தினமும் 60 டன் காய்கறிகள் விற்பனையாகிறது.

பொதுமக்கள் மட்டுமின்றி, சிறு வியாபாரிகளும் அதிகம் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். விசேஷ வீடுகளுக்கு தேவையான காய்கறிகளையும் இங்கு தான் வாங்குகின்றனர். பெரியகுளம் ரோட்டில் இருந்து சந்தை வரை செல்லும் ரோட்டின் இரு புறமும் விவசாயிகள் கடைகளை அமைத்து காய்கறிகளை விற்கின்றனர். அதாவது தேனி உழவர்சந்தை செயல்படும் இடம் தினமும் காலையில் நடைபெரும் காய்கறி திருவிழா திடல் போல் காணப்படும்.

தேனி உழவர் சந்தை முகப்பு பகுதி காலை 11 மணிக்கு எடுத்த படம்.

சந்தையின் செயல்பாடுகளை கவனித்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, ‘‘ஒரு உழவர் சந்தையை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை, மற்ற மாவட்ட ஆட்சியர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் பஷீர் அகமதுவை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்’’ என புகழ்ந்து தள்ளினார். அந்த அளவுக்கு பிரெஸ்ஸான காய்கறிகள், குறைந்த விலையில் இங்கு கிடைக்கிறது.

அப்போது முதல் 27வது ஆண்டாக தற்போது வரை சிறப்பாக செயல்படுகிறது. பல ஏழை விவசாயிகளை தேனி உழவர்சந்தை பெரும் பணக்காரர்களாக மாற்றி உள்ளது. எவ்வளவு பணம் சேர்ந்தாலும், விவசாயிகளின் உழைப்பும், குணமும், உடல் மொழியும், வாழ்வியல் முறையும் மாறாது. அப்படி ஒரு பண்பு, நாகரீகத்துடன் இன்னும் சந்தை விவசாயிகள் நடந்து வருகின்றனர்.

அதேபோல் விவசாய விற்பனைத்துறையும், மிகவும் சிறப்பாக உழவர்சந்தையை நிர்வகித்து வருகிறது. காலை 4 மணிக்கு அதிகாரிகள் இங்கு பணிக்கு வருவதை இந்த நிமிடம் வரை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளனர். சந்தை முழுமையாக விற்பனை முடியும் வரை அதிகாரிகள் இருந்து நிலவரத்தை கண்காணிக்கின்றனர்.

அவ்வப்போது எழும் சிறு, சிறு குறைகளை சந்தை அதிகாரிகள் உடனுக்குடன் சரி செய்கின்றனர். மொத்தத்தில் அரசின் திட்டங்களில் உழவர்சந்தை திட்டம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றாலும், தேனி உழவர்சந்தை அதில் சுப்ரீம் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.

இப்படிப்பட்ட சந்தையில் வேளாண் வணிக கூடுதல் இயக்குனர் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். காய்கறிகள் விற்பனை, விலை நிலவரம், நிர்வாக நடைமுறைகள், நிர்வகிக்கும் முறைகள் உட்பட பல்வேறு விஷயங்களை அவர் விரிவாக ஆய்வு செய்தார்.

தேனி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுரேஷ்குமார், உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமன், உதவி நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார், திலீப்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சந்தையை ஆய்வு செய்த அதிகாரிகள் இங்கு வியாபாரம் நடக்கும் விதம், மக்கள் ஆர்வமாக காய்கறிகளை வாங்கும் விதம் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top