புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி மழலையர் வகுப்புக் குழந்தைகளுக்கான ‘நீல வண்ண தினம்’ உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டிப் பள்ளிக்கு வந்த மழலைக் குழந்தைகள் அனைவரும் நீல நிற ஆடைகள், நீல நிற தோடு, ரிப்பன், வளையல் மற்றும் தலையில் நீல நிறத்தில் பூச்சூடி பள்ளி வளாகத்தையே நீல வண்ண மயமாக மாற்றினர்.
விழாவில், மழலைச் செல்வங்கள் நீல நிறத்தின் சிறப்புகள் குறித்த குட்டி உரைகளையும், மழலைப் பாடல்களையும் பாடி அனைவரையும் கவர்ந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மாதந்தோறும் ஒரு புதிய வண்ணத்தைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் பள்ளியில் நடத்தப்படும் இதுபோன்ற ‘வண்ண தினங்கள்’, குழந்தைகளின் கற்றல் திறனுக்கும் புரிதலுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகப் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த நீல வண்ண தினத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளை மழலையர் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ரம்யா மற்றும் ஆசிரியைகள் அட்சயப் பிரியா, கிருத்திகா ஆகியோர் செய்திருந்தனர்.




