தேசிய அளவில் நடைபெற்ற ரோலர் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்த புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மார்க் இமானுவேலுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், 63-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றன. இதில் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் மார்க் இமானுவேல் கலந்துகொண்டு, தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துப் பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 19, 2026 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட பரிசளிப்பு விழாவில், சாதனை படைத்த மாணவர் மார்க் இமானுவேலுக்குப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலை ஆகியவை வழங்கப்பட்டன.
தேசிய அளவில் வெற்றி பெற்றுத் திரும்பிய மாணவர் மார்க் இமானுவேலைப் பாராட்டும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் மாணவருக்கு நினைவுப் பரிசு வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் நாகபாண்டியன், முத்துமணி, சுகுனா மற்றும் சக ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் வெற்றி பெற்ற மாணவருக்குத் தங்களது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.




