தீபாவளி பண்டிகை நேரத்தில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஏடிஎஸ்பி விஜயராகவன் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுப்படுகிறது. இதை குறி வைத்து பல்வேறு ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகின்றன.
இதை தடுக்க சைபர் கிரைம் பிரிவு போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆன்லைனில் குறைந்த விலைக்கு விளம்பரப்படுத்தப்படும் துணிகள், பொருட்களை ஆர்டர் செய்யும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறைய பட்டாசுகள் குறைந்த விலையில் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதன் உண்மை தன்மை அறியாமல் ஏமாற வேண்டாம்.
ஆன்லைனில் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி நடைமுறை செலவுகள், ஆவண செலவுகள் என பெற்று ஏமாற்றும் நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.
வயதானவர்களை குறி வைத்து காவல் துறை அதிகாரிகள் போல பேசி, சட்ட விரோத செயல்களில் தங்களின் வங்கி கணக்குகள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம்.
டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக கூறி அச்சுறுத்தி பணம் கேட்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணையத்தை பயன்படுத்தி லோன் ஆப் மூலம் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
தெரியாத செல்போன் எண்களில் வரும் வாட்ஸ்அப் வீடியோ கால்களை எடுத்து பேச வேண்டாம். அதில் நமது புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் செய்து நம்மிடம் பணம் கேட்டு ஏமாற்றுவார்கள்.
அதே போல பகுதி நேர வேலை, வணிகத்தில் முதலீடு என்ற பெயரில் வரும் போலியான வெப்சைட்டுகளில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என கூறினார்.




