தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை ஜே.ஜே. கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஜே.ஜே. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலுமிருந்து 47 பள்ளிகளைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 60-க்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் பிச்சைமுத்து தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், மாவட்டச் செயலாளர் ஜெயராம் வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் ஸ்டீபன்நாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.ஜே. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பரசுராமன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
மாநாட்டின் நோக்கம் குறித்து மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் மணவாளன் உரையாற்றினார். மாணவர்களின் ஆய்வுகள் குறித்த கருத்துரையை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார் வழங்கினார். ‘மை பாரத்’ நமச்சிவாயம், மாவட்டத் துணைத் தலைவர் சதாசிவம், மாவட்ட இணைச் செயலாளர் இராம திலகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜே.ஜே. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்தனர்.
மாவட்ட அளவிலான இம்மாநாட்டில் சிறந்த ஆய்வுகளைச் சமர்ப்பித்து, மாநில மாநாட்டுக்குத் தேர்வான இளம் விஞ்ஞானிகளின் பெயர்களை மாநிலத் துணைத் தலைவர் வீரமுத்து அறிவித்தார். இதன்படி கீழ்க்கண்ட 8 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மாநில மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்:
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வேதியன்குடி
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இடையன்காடு
- மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை
- அரசு உயர்நிலைப் பள்ளி, மிரட்டுநிலை
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கருங்குழிகாடு
- அரசு உயர்நிலைப் பள்ளி, ஏம்பல்
- அரசு மேல்நிலைப் பள்ளி, கீரனூர்
- மவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி, புதுக்கோட்டை
தேர்வு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் மற்றும் தணிக்கையாளர் தியாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் இளம் விஞ்ஞானிகளுக்கான பதக்கங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட அமைப்பாளர் தயாநிதி ஒருங்கிணைத்திருந்தார். அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர்கள் முத்துக்குமார், செல்வராஜ், ஜெரினா பேகம், செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாங்கம், ஒன்றியச் செயலாளர் மீனாட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
மாநாட்டுத் தொகுப்புரையை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபா வழங்கினார். நிறைவாக, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் கல்வி ஒருங்கிணைப்பாளர் அருள் சுந்தரம் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.




