நாமக்கல் ரயில் நிலையத்தில் கூட்ஸ் ஷெட் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரூ. 17 கோடி மதிப்பில், மேம்படுத்தப்பட்ட நாமக்கல் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
விழாவில், நாமக்கல் எம்.பி, மாதேஸ்வரன் கலந்துகொண்டு பேசியதாவது: நாமக்கல் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்கள் வந்து செல்லும் பாதை முன்பு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் சரக்குகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் தேவையான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ரயில்வே துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தொழிலுடன் தொடர்புடைய தீவன மூலப்பொருட்கள் போக்குவரத்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, கோழிப்பண்ணை உரிமையாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ரயில்வே கூட்ஸ் ஷெட்டை 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, இரவு நேரங்களில் லாரிகள் வந்து நிற்பதால் ஏற்படும் காலதாமதம் மற்றும் சரக்குகளை இறக்குவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும்.
நாமக்கல் வழியாக சென்னை செல்லும் ரயிலை வாரத்தில் 3 நாட்களுக்குப் பதிலாக 6 நாட்கள் இயக்கவேண்டும். நாமக்கல் மாவட்ட மக்களின் கோயம்புத்தூர் பயணத்துக்குப் போதிய ரயில் வசதிகள் இல்லை. எனவே, பாலக்காட்டில் இருந்து வரும் ரயிலை கரூர், நாமக்கல் வழியாக சேலம் வரை இயக்க வேண்டும்.
மேலும், நாமக்கல் மாவட்ட மக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் சிலவற்றை நாமக்கல் வழியாக இயக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று பேசினார்.




