விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயல்படும் எரிசாராய ஆலை இயங்குவதற்கு, மற்ற ஆலைகளில் இருந்து மொலாசஸ் (சர்க்கரை கழிவு பாகு) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், நாமக்கல் எம்.எல்.ஏ., திலீப்பிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள, 18 கூட்டுறவு மற்றும் பொது துறை சர்க்கரை ஆலைகளில், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகிய, 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மட்டுமே எரிசாராய ஆலை இயங்கி வந்தது.
தற்போது, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மட்டுமே எரிசாராய ஆலை இயங்கி வருகிறது. ஆலையின் முழு அரவை திறனான, 4.3 லட்சம் டன்கள் கரும்பை, 10 ஆண்டுகளாக ஆலை அரவை செய்யாததாலும், ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சம் டன்களுக்கும் குறைவாகவே கரும்பை அரவை செய்வதாலும், போதிய அளவில் சர்க்கரை கழிவு பாகு (மொலாசஸ்) கிடைக்கப்பெறாத நிலையில், ஒன்று முதல், இரண்டு மாதங்கள் மட்டுமே எரிசாராய ஆலை இயங்கக்கூடிய நிலை ஏற்பட்டது.
இதனால், எரிசாராய ஆலை நஷ்டம் அடைந்து வருகிறது. தற்போது, பதவியேற்றுள்ள புதிய த.வெ.க., அரசு, கரும்பு விவசாயிகளின் நலனில் அக்கரை கொண்டு, கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்தவாறு, கரும்புக்கான கிரைய தொகையை உயர்த்தி, விவசாயிகள் மகிழ்ச்சி அடையவும், கரும்பு பயிரிட ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வரும் அரவை பருவம் முதல், கரும்பு பரப்பு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, அதன் முழு அரவை திறனை அடைந்து, சர்க்கரை கழிவு பாகு கிடைப்பதில், தன்னிறைவை அடையும் வரை, சர்க்கரை கழிவு பாகு பற்றாக்குறை ஏற்படும் மாதங்களில், மாதத்திற்கு 4,000 முதல், 4,500 டன்கள் கழிவுபாகுவை மற்ற கூட்டுறவு மற்றும் பொது துறை சர்க்கரை ஆலைகளில் இருந்து, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, சர்க்களை ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதால், எரிசாராய ஆலை முழுமையாக இயங்கினால் மட்டுமே, அதன்மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு, ஆலையின் அரவைக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கும், தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்கவும், சில நேரங்களில் கரும்பு கிரைய தொகை வழங்ககூடிய சூழ்நிலையும் உருவாகும்.
மேலும் ஒவ்வொரு ஆண்டு அரவை பருவத்திற்கு, அரசு மூலம் கிடைக்கும் வழிவகை கடன் கிடைக்க ஆவண செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.




