நாமக்கல் மாநகராட்சி பகுதியில் நிலம் வைத்திருப்பவர்கள், தங்கள் நிலத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மாநகராட்சி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளைப் பராமரிக்கவும், நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்கு உட்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தனியார் பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை, நில உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும். இது மாநகராட்சி பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவியாக அமையும்.
மேலும், இதுதொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் சீமைக்கருவேல மரங்களை அகற்றத் தவறினால், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்களும், நில பட்டாதாரர்களும் மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




